Monday, 12 December 2011

ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு

விலங்குகள், பறவைகளில் ஆண், பெண் இனங்கள் இருப்பது போலவே, சில மர வகைகளிலும் ஆண், பெண் மரங்கள் உள்ளன. ஈஞ்ச மரமும், பப்பாளி மரமும், பனை மரமும், தாழம் புதரும் இதற்கு நல்ல உதாரணங்கள். பப்பாளி தமிழ்நாட்டுக்கு அண்மைக் காலத்தில் வந்த பயிர், எனவே பழைய இலக்கியங்களில் அதுபற்றிக் குறிப்புகள் இல்லை. ஆனால், பனை தமிழர் வாழ்வொடும் பண்டுதொட்டே நெருங்கிய உறவுடைய மரம், தமிழ்நாட்டின் தேசிய மரம். பனையின் எல்லாப் பகுதிகளும் பயன்படுவதால், கற்பக விருட்சம் என்பது அதன் புகழ்ப் பெயர். சேரர்களின் சின்னம் பனை. வேளாண்மைக் கடவுளான பலராமன் பனைமரக் கொடி கொண்டவன், கண்ணனின் அண்ணன் பலதேவன் எப்பொழுதும் பனங்-கள் கிண்ணம் கையில் பிடித்திருப்பவன். பலதேவனும், சேரரும் பனந்தார் மாலை அணிவர்.

தாழையிலும் ஆண் பெண் வேறுபாடு உண்டு: ஆண் தாழை காய்க்கும், பூக்காது; பெண் தாழை பூக்கும், காய்க்காது. தாழ்- என்னும் வினைச்சொல்லில் பிறந்த தமிழ்ப் பெயர்கள் பனை, தென்னை, கைதை - மூன்று புல்வகைகளுக்கும் உண்டு. தாழை = தென்னை என்பதற்கு உதாரணம்: குலையிறங்கிய கோள்தாழை (புறநா. 17). தாடி (< தாழ்-) = பனை. கைதை = ஈரமான சதுப்பு நிலம், எனவே கைதை/கைதல் தாழைக்கு ஒரு ஆகுபெயர். கைதை > வடமொழியில் கேதகீ என்றாகும். ஏற்றை என்று அஃறிணை ஆண்பாலுக்குப் பேர் என்கிறது தொல்காப்பியம் (மரபியல் சூத்திரம், 50 இளம்பூரணர் உரை: ஏற்புழிக்கோடல் என்பதனான் அஃறிணைக்கண்ணும் கொள்ளப்படும்). எனவே ஆண் தாழையை ஏற்றைத்தாழை என்றும், பெண் தாழையைப் பெண்ணைத்தாழை என்றும் அழைக்கத் தமிழ்மரபு வழிகாட்டுகிறது எனலாம். வீழ் இல் தாழை = தெங்கு, அதில் ஆண், பெண் தனியாய் இல்லை. ஆனால், விழுதுகள் உள்ள தாழையாம் வீழ்தாழையிலே தான் ஏற்றை, பெண்ணை பகுப்புகள் ஈச்சை, பனைபோல உள்ளன.

பனைகளில் ஆணும் பெண்ணும்:

பனையின் பால்வேறுபாட்டைத் தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளாக அறிந்திருந்தனர் என்பதற்குச் சங்க இலக்கியம் தொட்டே சான்றுகளும் வாழ்வுமுறைகளும் உள்ளன. தாலவிலாசம் என்னும் பிரபந்தமே இருக்கிறது. பனையில் ஆண் மரங்கள் பூக்குமே ஒழியக் காய்க்கா, ஆனால் பெண் பனைகளுக்குச் சிறப்பான காரணப்பெயர் பெண்ணை என்பது. பெண்கள் குழந்தை பெறுவது போல, பெண்ணை (பெண் பனைகள்) குரும்பைகளை ஈனுகின்றன. பலா, தென்னை மரங்களில் ஆண் பூக்களும், பெண் பூக்களும் ஒரே மரத்தில் இருக்கின்றன. எனவே எல்லாத் தென்னை மரங்களும், பலா மரங்களும் குலை ஈனுகின்றன. ஆனால் பனையில் பாற்பகுப்பு இருப்பதால் ஆண்பனை ஆண்பூவும், பெண்பனை பெண்பூவும் பூக்கும். ஆனால் ஆண்பனை காய்க்காது. Coconut palms are monoecious and Palmyrah palms are dioecious. "தென்னையில் ஆண் மரம், பெண் மரம் என்று கிடையாது. பனையில் ஆண் பனை அலகுப்பனை என்றும், பெண் பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண் பனையில் நுங்கு கிடைக்கிறது. இரண்டிலும் பதநீர் எடுக்க முடியும். ஆனால், பெண் பனையில் வரும் பாளைகளில் பதநீர் எடுத்தால் பிறகு நுங்கு கிடைக்காது, பனம் பழம் கிடைக்காது, பனை விதை கிடைக்காது" - பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன், வீணாகும் பனைமரங்கள் உரை. 

ஆண்பனைக்குப் பெயர்கள்: பூம்பனை, காயாப்பனை (தொல். பொ. 558, உரை.), அலகுப் பனை, கதிர்ப்பனை முதலியன. “ஓரறிவுயிருள் ஆண் பெண் என வேறுபடுத்தலாவன ஏற்றைப்பனை ஆண்பனை எனவரும்” (தொல். மரபியல் 51, இளம்பூரணம்). ஏற்றை ( < ஏறு) = ஆண் பனை (நாலடியார்):

நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.


ஏற்றைக்கும் (ஆண் பனைக்கும்) பெண்ணைக்கும் (பெண்பனை) உள்ள வித்தியாசம் தெரிவிக்கும் நாலடி வெண்பா. படு = மரத்தின் குலை (பிங்கலந்தை). படு பனை = கோள் பெண்ணை, குலை ஈனும் பனை. நடு ஊரில் மேடையில் குலை ஈன்று ஏராளமான பழங்களுடன் விளங்கும் பெண்ணை (காய்ம்பனை) மரத்துக்கு எதிராக இடு காட்டுள் விளங்கும் ஏற்றை (காயாப் பனை) பேசப்படுகிறது. நாலடி ஆசிரியர்,இளம்பூரணர் போன்ற சமணாசிரியர்கள் பனையின் ஆண், பெண் வேறுபாட்டை நன்கு குறிப்பதாலே சமண வழக்கமாகிய ”தாறிடு பெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ்” (தேவாரம்) என்பது பெண்ணைத் துறந்த துறவடிகள் (Jain monks) பெண்ணை மரத் தடுக்கை இருக்கை ஆக்கினர் எனலாம். மடலூர்தலுக்கும் பெண்ணை பயனாதல் ஒப்பாகும். நடராஜர் அபஸ்மாரனைக் காலிலும், மகாயான போதிசத்துவர்கள் சிவன், கணபதி, விஷ்ணு எனக் கீழேபோட்டு மிதித்தலும் போன்ற செய்கையாம். சமணத் துறவியருக்கு உடையில்லை, பெண்ணைத் தடுக்கு தான். பௌத்த பிக்குகளுக்கு உள்ள சீவர ஆடை துவர் ஊட்டப்பெறுவது. இதற்கு மருத மரங்கள் தருவனவற்றைப் பாவித்தல் பண்டை வழக்கம். தேவார வரிகள் சில பார்ப்போம்: (அ) ”செருமரு தண் துவர்த் தேரர்” - நெருங்கிய மருதமர இலையின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணிந்த பௌத்தர்களும் (ஆ) ”மருதமர் வன்மலர் துவருடையவர்களும்” - மருதப் பூவைக் காய்ச்சி அட்டித்துத் துவர் ஊட்டிய ஆடை அணிந்த புத்த பிக்ஷுகளும் (இ) ”பட்டை நற்றுவர் ஆடையினாரொடும்” -நல்ல மருதந் துவர்ப் பட்டையின் சாறுஊட்டப்பட்ட ஆடையை அணிந்த சாக்கியரும் (ஈ) ”இலை மருதே அழகாக நாளும் இடுதுவர்க் காயொடு சுக்குத் தின்னும் நிலையமண் தேரரை நீங்கிநின்று” (உ) ”இலை மலிதர மிகு துவர்உடையவர்களும்” - மருத இலையை அட்டி, துவர் தோய்த்த ஆடை போர்த்த புத்தர்கள். பாணன், விறலியை வாயிலாக வைத்து பரத்தையர் பலரைத் துய்க்கும் மருத நிலத் தலவர்களால் தலைவி ஊடலும், ஊடல் நிமித்தமும் பாடுவது மருதத் திணை என்பது ஈண்டு நினையத் தக்கது. பெண்ணாசை வெறுத்த சமண, பௌத்த துறவியருக்கு பெண்ணைத் தடுக்கோ, மருத மரத்தை வேவித்த ஆடையோ துணையாக விளங்குவன. இத் துறவுச் சின்னங்கள் பாரத மரபில் மிகப்பழையன. ஹிந்துசமயத் துறவிகள் உபநிஷத காலத்தில் தங்கள் சின்னமாகக் கொண்டது காவிக்கல் தோய்த்த கல்லாடை. இது, மருதத் துவராடைக்கு மாற்றாய் தேர்ந்தெடுப்பது. சிவன் ”கோத்த கல்லாடையும்”, ”கல்லாடை மேற்கொண்ட காபாலி காண்” (தேவாரம்). ”கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப” (முல்லைப்பாட்டு). ஆக, கல்லாடை, (மருதின்) துவராடை இரண்டும் நீண்ட காலமாய் இருந்துள்ளன. 

ஆண்பனையின் பூக்களால் செய்த மாலையைச் சேரர்கள் அணிந்தனர். சிறுவர்கள் ஐம்படைத் தாலி அணிதல் ஆண்பனை ஓலையாக இருக்கலாம். திருமணத்தின் போது பெண்கள் அணியும் தாலி கணவனின் சின்னமாக அவன் உயிரோடு இருக்கும்வரை போற்றப்படுதலால் ஆண்பனை ஓலையில் செய்வதாகும். இருக்கும் மரங்கள் எத்தனையோ இருக்க தால மரத்தின் ஓலையை ஏன் பெண்ணுக்குத் தாலியாய்க் கட்டவேண்டும்? விடை: ஆண், பெண் பால் வேறுபாடு தெளிவாக உள்ளது பனையிலே தான். எனவே, ஆண் பெண் வேறுபாடு காட்டி அணிகள் உருவாக்கல் பனை மரத்தால் தமிழருக்குச் சாத்தியமானது. பெண்ணொருத்தி திருமணம் செய்ய மறுத்தால் அல்லது காலம் தாழ்த்தினால் பெண்ணை (பெண் பனை) மடல் கருக்கில் குதிரை போல் செய்து தலைவன் ஊர்தல் மடலூர்தல் வழக்கம். ஊரார் எல்லோருக்கும் தெரியவர அலர் தூற்றலாலோ, அறிவுரையாலோ தலைவி மனம்மாறி மணம் நிகழும் என்பது நம்பிக்கை. தொல்காப்பியரும், வள்ளுவரும் பெண்கள் பெண்ணை மடலூர்தல் வழக்கம் இல்லை என்று வரையறுத்துள்ளனர். இதன் காரணம் தமிழர் போற்றும் கற்புக்கோட்பாடு. வையாபுரிப்பிள்ளை அதர்வவேதத்தில் பெண்கள் மடலூர்தல் செய்தியைக் காட்டியுள்ளார், வடக்கே இலக்கியங்களில் (காதா சப்தசதீ, மகாபாரத திரௌபதி) கற்பின் மேன்மை குறைவு, எனவே வடநாட்டு இலக்கியங்களிலே பெண்கள் மடலூரலாம் என்கிறார்கள் போலும்.

விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி - குறுந்தொகை 182
(விழுத்தலைப் பெண்ணை - சீரான பருவப் பெண்பனை).

அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப,
ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து - கலித்தொகை

தாரானை தாமரைபோல் கண்ணனை யெண்ணருஞ்சீர்ப் 
பேரா யிரமும் பிதற்றிப் பெருந்தெருவே 
ஊராரிகழிலும் ஊராதொழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல் (சிறிய திருமடல்) 

[...] மற்றுஇவைதான்
உன்னி உலவா உலகுஅறிய ஊர்வன்நான்
முன்னி முளைத்துஎழுந்து ஓங்கி ஒளிபரந்த
மன்னிய பூம்பெண்ணை மடல் (பெரிய திருமடல்)

மங்கை ஆழ்வார் திருமடல்களில் பூம்பெண்ணை என்பதென்னை? பூம்பெண்ணை கன்னிப்பெண்ணையாம். அதாவது பருவம் அடைந்துவிட்டதைக் காட்டாநின்று பூத்துக் குலுங்கும் அழகிய பருவப் பெண்பனை பூம்பெண்ணை. ஈனாக் கிடாரியில் இருந்து கோமயம் பெறுதல்போல், கன்னிப்பெண்ணை மடலைத் தலைவன் மடன்மா செய்யச் தெரிந்தெடுக்கிறான். ”வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல்” (முத்தொள்ளாயிரம்). காராணை விழுப்பரையன் வளமடல் குரும்பை அரும்பிய காதலி பொருட்டாக பெண்ணை மடல் ஊர்கிறேன் என்பதாகக் குறிக்கிறது:

வார்தோறும் பொங்கு மணிக்குரும்பை வல்லிபொருட்டு
ஊர்தோறும் நாடோறும் ஊர்கின்றேன் - சீர்தோறும்
செய்கைசூழ் சீலத் தியாகதுங்க நன்னாட்டில்
வைகைசூழ் பெண்ணை மடல்.

பெண்கள் தோடு என்னும் வட்டமான அணியைப் பூணுவர். மாதொரு பாகனான சிவபிரானின் நடராஜ மூர்த்தங்களில் தோடுடைய இடதுசெவியைக் காணமுடியும். வெண்தோடு பனம்பூவின் புறவிதழ் (Calyx)என்ற பொருளை “பெருமடற் பெண்ணைப் பிணர்த்தோட்டுப் பைங்குரும்பை” (கலித்தொகை), ‘இனமடற் பெண்ணை ஈர்ந்தோடு திருத்தி’ (பெருங்கதை) காட்டுகிறது. ”இரும்பனை வெண்தோடு மலைந்தோன்” (புறம்). சோழர் காலப் பார்வதி சிலையில் தோடு வளையமாக இருத்தல் காண்க. (பட உதவி: ப்லாஸ்டிக்ஸ் சந்திரா, சென்னை). ஆண் பனம்பூக்கள் பெண்ணைப் பூக்களை விடச் சிறியன. குரும்பை ஈனும் பெண்ணையின் பூந்தோடு ஆண் பனைப் பூவைத் தாங்கும் தோட்டைவிடச் சற்றுப் பெரிய வளையமாக வளரும். ”வெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக் கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு” தேவாரம். பனையின் வெவ்வேறு பாகங்கள்:
தோடே மடலே ஓலை என்றா 
ஏடே இதழே பாளை என்றா 
ஈர்க்கே குலை என நேர்தான பிறவும் 
புல்லோடு வரும் எனச் சொல்லினர் புலவர் 
- தொல்காப்பியம் மரபியல் 88.
 தோடும், ஓலையும் வெவ்வேறானவை எனது தெளிவு.


தாழ்/தாள்/தாலம் என்பன பனையின் பெயர்கள்:
http://www.tamilnet.com/art.html?catid=98&artid=33826 
சோழர் சோட- என்று வடமொழியில் வருதற்போல், தாழ்/தாள் தாட- என்று வட மொழிகளில் ஆகின்றன. எனவே, பனையின் வெண்டோட்டு வளையம் தாடங்கம் என்ற பெயர் பெறுகிறது. ஆனைக்கா அகிலாண்டேஸ்வரி காதில் தாடங்கம் சிறப்பு (சௌந்தர்ய லஹரி, தாடங்க மஹிமை). திருக்கடவூர் அபிராமியும் தாடங்கம் கொண்டு அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கினதாக ஐதிஹ்யம். தாடங்கம் = (பனையின்) தாட + அங்கம் (Cf. தாடி (toddy))



பெண்ணை (< பெண்-): ஆறுகளுக்கு ஒரு காரணப்பெயர்

பெண் என்ற பெயர்ச்சொல்லின் அடிப்படை வேர்பிள- என்னும் வினைச்சொல் ஆகும். பிணா (< பிள்- ) என்றும் பெண் அழைக்கப்படுகிறாள். ”பெண்ணும் பிணாவும் மக்கட்குரிய” - தொல். மரபியல் 62. மலையில் இருந்து மழைநீர் நிலத்தைப் பிளந்து பள்ளம், படுகைகளை உருவாக்கி ஓடும் ஆறுகளுக்குப் பெண்ணை என்ற பெயர் ஏற்படுதல் இயற்கையே. நிலத்தைப் பிளந்து ஓடும் நதிகள் சில பெண்ணை என்றே காரணப் பெயர் பெறுகின்றன:
கரும்பெண்ணை (கண்ஹபெண்ணா, ஆந்திராவின் க்ருஷ்ணா நதி), வடபெண்ணை, தென்பெண்ணை.

கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் படிப்போம்:

(1) செய்ய பெண்ணை, கரிய பெண்ணைச் சில 
வைகல் தேடி, கடிது வழிக்கொள்வீர்

செய்ய பெண் - சிவந்த லக்ஷ்மி. கரிய பெண்ணை - ஆந்திராவின் கரும்பெண்ணை 
நதி, நள்ள/நல்ல (=“கரு”) மலைத்தொடரில் தோன்றும் கரும்பெண்ணை > க்ருஷ்ணவேணி > கிருஷ்ணா நதி) 

(2) புன் நை வெம் முலைப் புளினம், ஏய் தடத்து 
உண்ண ஆம்பல் இன் அமிழ்தம் ஊறு வாய், 
வண்ண வெண் நகைத் தரள வாள் முகப் 
பெண்ணை நண்ணினார் பெண்ணை நாடுவார் - கம்பர்.

பெண்ணை நதியை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தினார். பெண்ணை : நதி, பெண்; இச் சொல் நதியைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும் (பெண்ணை - பெண்ணையை), மற்றொரு பொருளான பெண்ணைக் குறிக்கும்போது இரண்டாம் வேற்றுமை விரியாகவும் (பெண் - ஐ) கொள்ளவேண்டும். பெண்ணை என்றால் பெண் பனைக்குக் காரணப்பெயரும் உண்டு. அடுத்ததாக அதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பெண்ணை (< பெண்-): பெண்பனைக்கு ஒரு காரணப்பெயர்

ஆண்பனைக்குப் பல பெயர்கள் உள்ளதை ஆராய்ந்தோம். பெண் பனைக்குப் பெண்ணை என்ற காரணப்பெயரை ஆதிகாலங்களிலேயே தமிழர் பயன்படுத்தி வந்துள்ளனர். "பெண்-பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை” [பாவாணர், மொழியாராய்ச்சிக் கட்டுரைகள், பக். 45].

பெண்ணை < பெண் (முதன்மைப் பொருள்).பெண்பனை என்று உறுதிபட நமக்குக் காட்டுவது அதன் குலைகள். அதனால், “கோள் பெண்ணை”, “இணர்ப் பெண்ணை”, ”குலைப் பெண்ணை”, “தாறிடு பெண்ணை” என்று இலக்கியங்கள் குறிக்கின்றன. கோள், இணர், படு, தாறு எல்லாமே குலைதான்:
(i) செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும் - புறநானூறு.
(ii) வண்கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் - சிறுபாணாற்றுப்படை.
(iii) பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது - மணிமேகலை.
கோள் = குலை. [1] கோள் தெங்கின் (பட்டினப்பாலை) [2] பல்கோட் பலவின் (கலித்தொகை) [3] கோள்மடல் கமுகின் [பெருங்கதை]
இணர் = Bunch of fruit; குலை. இணர்ப் பெண்ணை (பட்டினப்பாலை 18) [Madras Tamil Lexicon]

பசுக்களில் ஆண்பாற் பெயர்கள்: காளை, சே, விடை, ஏறு, எருது முதலியன. ‘பூணாச்சேவும், ஈனாக் கிடாரியும்’ கொங்குநாட்டில் வெள்ளாளர் மணப்பெண்ணுடன் அனுப்பும் சீதனவரிசை. பசுக்களில் பெண்பாற் பெயர்கள்: ஆ (Cf. ஆயி, தாய்த் தெய்வம்), பெற்றம் (< பெறு- ), சுரப்பி (< சுர-), கறவை (< கற-) மாடு (Cf. மடி), ... ஆண் பசுக்களின் பயனை விடப் பால் தரும் பெண் பசுக்களின் பயன் மிகுதி. இதனால், ஆண் கன்றுகளைப் பாணர் முதலிய குடிகளுக்குத் தானம் கொடுத்துவிடுவது விவசாயிகளின் வழக்கம் (culling of excessive male calves) என்று சங்க இலக்கியம் காட்டுகிறது (நற்றிணை 310). பெண் பசுக்களின் பயனால் பொதுவாகவே மாடுகள் என்றும், ஆக்கள் என்றும் கால்நடைகளை அழைப்பதும் உண்டு. அதுபோலவே, பெண்பனைகளில் நுங்கு, பனாட்டு செய்யப் பனம்பழம், ஒடியல் செய்யக் கூம்பு என்ற பயன்கள் இருப்பதால் பெண்ணை என்றே பனையைக் குறிப்பதும் உண்டு. பெண்ணை ஆண்பனையை விட 50% கள் அதிகம் தருகிறது. புறக்காழ் பெண்ணையின் வலிமை அதிகம் - எனவே ஆணை விடப் பெண்ணை மரமே கட்டிடங்களுக்குப் பயன்படும்.

பட்டினப்பாலை கொத்தும் குலையுமாக உள்ள தாவரங்களைக் கோத்துப் பாடுகிறது: தென்னைக்குள் நடும் வாழையும், பாக்கு மர நிழலில் மஞ்சள் விளைவதும், சேம்பு வயலில் இடையே நடும் இஞ்சியும், மாந்தோப்பு வரப்புகளில் பெண்ணை (பெண்பனை) ஓங்குதலுமான வேளாண்மை ஊடுபயிர்களில் விளையும் கனிகள் பேசப்படுகின்றன.

"கோள் தெங்கின், குலை வாழை,
காய்க் கமுகின், கமழ் மஞ்சள், 
இன மாவின், இணர்ப் பெண்ணை, 
முதல் சேம்பின், முளை இஞ்சி 
அகல் நகர் வியல் முற்றத்து" (பட்டினப்பாலை). 

”இணர்ப் பெண்ணை = குலைகளையுடைய பனையினையும்” நச்சினார்க்கினியரின் பட்டினப்பாலை உரை. பக்கம் 394, உவேசா, பத்துப்பாட்டு, 1918. 

ஆங்கில மொழிபெயர்ப்பில் 'இணர்ப் பெண்ணை' என்பதற்கு 
"in2am mAvin2 iNarp peNNAi" (paTTin2appAlai: 18) 
->"the mango trees growing in group and the palm trees with clusters of nuGku fruits." Note that there is NO use of panambuu for consumption, that's why "iNar" is not the flower-bunch here in PaTTinappAlai. This is clear when looking at the set of other fruit-bearing trees in the neighboring lines in PaTTinappAlai.

குலையில் பனங்காய்கள் கொத்தாய் நெருங்கி இணைந்திருப்பது “இணர்”. குலை என்பது குலம் என்பதோடு உறவுடைய சொல். குலம் இருக்கு வேதத்திலேயே உள்ள தமிழ்/த்ராவிட வார்த்தை. இணர் = குலை (பட்டினப்பாலை). குலமே வழிவழியாக சிறந்திருத்தலைப் பழமொழி நானூறு பாடுகிறது. இணரோங்கி வந்தாரை (பழ. 72) = பரம்பரையாக உயர்தல்.
புகரிணர்சூழ் வட்டத்தவை - பரிபாடல் 15.61. இங்கே, இணர் - ஒழுங்கு, Order; arrangement, as of troops 
”கப்பு இணர் மரத்தில் காலும் பயினதாய்” -திருவிளையாடற் புராணம். கம்புகள் (கிளைகள்) நெருங்கின மரத்தில் இணைந்த கப்புகளினின்றும் ஒழுகும் பிசின். 
இணாட்டு - நெருங்கி இணைந்தவற்றிலிருந்து உருவாபவை: 1. மீன் செதிள். 2. ஓலைத் துண்டு. 

”ஒருநெடுங் கங்கை இருங்குறும் பைம்புகர் 
மும்முகச் செந்நுதி நாலிணர் வௌ்நிணக் 
குடற்புலபு கமழும் அடற்கழுப் படையவன்” 
(சைவத் திருமுறை, அதிராவடிகள் அருளிய மூத்த பிள்ளையார் மும்மணிக்கோவை). 
சிவன் சூலத்தில் நெருங்கி இணைந்துள்ள இணராகிய குடல். 

இணர் (Cf. இணக்கல், இணை-) நெருங்கி இணைந்தது. குலை, குலம், கொத்து போன்றன மிக அடிப்படையான பொருட்கள் கொண்ட சொல் “இணர்” ஆகும். இணர்ப் பெண்னை, கோட் பெண்ணை, குலைப்பெண்ணை பருவமடைந்து காய்க்கும் பெண்பனையாம். பெண் குழந்தை ஒன்றைப் பெற்றாள் என்பது போலப், பெண்ணை (மரம்) குலையை ஈன்றது என்கிறோம்.

பெண்ணை (பெண்பனை) மரத்தில் தூக்கணாங் குருவிகள் கூடு கட்டும்: 

மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பை (நற்றிணை 303). 
தூக்கணங்குரீஇ . . . பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்தொகை 374). 
ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங்குரீஇக் கூட்டுள சினையே (இறை. 9) 

அன்றில் என்னும் க்ரௌஞ்சம் நெய்தல்நிலப் புள் (Plegadis falcinellus). அது பெடையொடு கூடுகட்டி வாழப் பெண்ணை (பெண்பனை) மரம் அதன் விருப்பத் தேர்வு. அன்றிலின் குரல் காதலரை நைவிக்கும். "விளரிக் குரலன்றில் மென்படை மேகின்ற முன்றில்பெண்ணை", "காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும்",
“பெண்ணைமேல் பின்னுமவ்வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும், என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர்வாளா மென்செய்தேன்” ”பெண்ணைமேல் பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலுக்கு, உன்னி யுடலுருகி நையாதார்” (ஆழ்வார்கள்).

"குன்ற மெடுத்து மழைத டுத்துஇளை யாரொடும்
மன்றில் குரவை யிணைந்த மாலென்னை மால்செய்தான்,
முன்றில் தனிநின்ற பெண்ணை மேல்கிடந் தீர்கின்ற
அன்றிலின் கூட்டைப் பிரிக்க கிற்பவ ரார்கொலோ!"
(வீடடின் முன்றிலில் வளர்த்துவது பெண்ணை என்னும் பெண்பனை. காயாப்பனையாகிய ஏற்றைப்பனையால் பலனில்லை என்பது நாலடியார் வெண்பா.)

”தமிழே! ஆண்பனையைப் பெண்ணை ஆக்கினாய். அந்தப் பெண்பனையில் வாழும் அன்றிலை வேறொரு பறவை ஆக்காயோ?” என்று விரகத்தில் தவிக்கும் தலைவி கேட்பதாய்த் தமிழ் விடுதூது பாடுகிறது. சம்பந்தர் ஆண்பனையைப் பெண்ணை ஆக்கிய செய்தியைச் சொல்லிய உடனே தமிழ்விடுதூது அன்றிற் பறவையைப் பாடுவதைக் கருத்தூன்றிக் கவனிக்கவும். அன்றிலின் விருப்பம் பெண்ணை, அதில் கூடுகட்டுதலைச் சுட்டியது. ஏற்றையைப் பெண்ணை ஆக்கினதுபோல், தலைவி அகத்து முன்றிலில் பெண்ணையில் கூடுகட்டும் அன்றில்களை இன்னொரு பறவை ஆக்கினால் அன்றில்குரல் இராதே என்பது குறிப்பு. சேக்கிழார் பெரிய புராணத்தில் சம்பந்தர் தேவாரப் பதிகம் பாடி ஆண்பனையைப் பெண்ணையாக மாற்றிய செய்தியைப் புகழ்கிறார். 

விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப்பதனில் விமலரருளாலே 
குரும்பை ஆண்பனைஈனும் என்னும் வாய்மை குலவுதலால் 
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம் நிறைந்த குலைகளாய்க் குரும்பை 
அரும்பு பெண்ணை யாகிடக் கண்டோ ரெல்லாம் அதிசயித்தார். 

குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர் 
அரும்பு கொன்றை அடிகளை 
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல் 
விரும்புவார் வினை வீடே. - சம்பந்தர் 

சங்க இலக்கியம் தொடங்கிக் குலை ஈனும் பெண்ணை: இலக்கியச் சான்றுகள்

செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும் (புறம்)

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் (பட்டினப்பாலை)

இனமாவின் இணர்ப்பெண்ணை (பட்டினப்பாலை)

வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின் (சிறுபாண்.)

திரளரைப் பெண்ணை நுங்கொடு பிறவுந் (பெரும்பாண்.)

ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் (குறுந்தொகை)

பெரு மடல் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைங் குரும்பைக் (கலித்.)

பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது (மணிமேகலை)

பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில் (தேவாரம்)

தாறிடு பெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் (தேவாரம்)

தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்மணற் படப்பை (தேவாரம்)

பெருங்கதை: 

46. உழைச்சன விலாவணை:
ஓங்குமடற் பெண்ணைத் தீங்குலைத் தொடுத்த 
விளைவுறு தீங்கனி வீழ்ச்சி ஏய்ப்பத் 
தளையவிழ் தாமமொடு தலைபல புரளவும் 

2. கடிக்கம்பலை 
தெங்கின் ஊறலும் தேம்பிழித் தேறலும் 
தாங்கரும் பெண்ணைப் பூங்குலை அமுதமும் 

சீவக சிந்தாமணி: 
2053 
மடல் அணி பெண்ணை ஈன்ற மணிமருள் குரும்பை மான 
உடல் அணி ஆவி நைய உருத்து எழு முலையினாளும் 

2227 
பொரும் களத்து ஆடவர் பொலிவில் பைந்தலை 
அரும் பெறல் கண்ணியோடு அற்று வீழ்வன 
கரும் கனிப் பெண்ணை அம் கானல் கால் பொற 
இரும் கனி சொரிவன போன்ற என்பவே 

2526 
கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற 
இழை முலைத் தடத்தினாள் தன் கணவனைக் காண ஏகிக் 

2763 
சூழ் குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்த தீம் கனிகள் ஊழ்த்து 
வீழ்வன போல வீழ்ந்து 

முத்தொள்ளாயிரம்:
வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோல் 
ஏரிய ஆயினும் என்செய்யும் - கூரிய 
கோட்டானைத் தென்னன் குளிர்சாந்து அணிஅகலக் 
கோட்டுமன் கொள்ளா முலை

No comments:

Post a Comment