Monday, 12 December 2011

கலை மான்

கலை மான் (Blackbuck stag): antilope cervicapra
http://en.wikipedia.org/wiki/Black_buck



கலைமான் (ஆண்) திருகுகொம்பு உடையது. பெண்மாண்களுக்குத் திருகுகொம்பு இல்லை (female blackbucks have little spikes only, if at all they show up.)





இந்தியாவிலே உருவான மான் குடும்பம் - கலைமான் (கிருஷ்ணமிருகம்).
ஆசியா வரைபடத்தில் உலகிலேயே இந்தியாவில் மட்டுமே கலைமான்
இயற்கையின் நன்கொடை.




இந்தியாவில் தோன்றி வாழும் மான்களில் இலக்கியங்களிலும் கலைச்சிற்பங்களிலும் முக்கிய இடம்பெறுவது கலைமான் ஆகும். கலை (கலைமான்), இரலை என்பன கருநிற மானாக விளங்கும் ஆண்பாலைக் குறிக்கும் பெயர்கள். இந்த வகை மான்களில் கருநிறத்தில் அல்லாமல் பழுப்பு நிறமாக பெண்ணினம் இருக்கும். ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாக இம் மானினத்தைப் புல்வாய் என்கிறோம்.

ஏறும் ஏற்றையும் ஒருத்தலும் களிறும்
சேவும் சேவலும் இரலையும் கலையும்
மோத்தையும் தகரும் உதளும் அப்பரும்
போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும்
யாத்த ஆண்பாற் பெயர் என மொழிப. 2
(தொல். பொருள். மரபியல்)

கல்-/கரு- ‘black' > கலை, இரலை (Cf. ஈரல்) - இரண்டும் கருமான் ஆகிய புல்வாய்-ஏறு ஆகும்.

கருமை நிறமல்லாத பெண்-புல்வாய்க்கு கரியபொருள் தரும் கலை அல்லது இரலை என்ற பெயர் பொருந்தாது அன்றோ? எனவே, ஆணும், பெண்ணும் சேர்த்துப் பொதுவாய் முழு இனத்தையும் குறிப்பிடப் புல்வாய் என்னும் சொல்லைத் தொல்காப்பியர் ஆளுகிறார். 

இரலையும் கலையும் புல்வாய்க்கு உரிய. 
(தொல். பொருள். மரபியல் 46)

துர்க்கை/கொற்றவை சிந்து சமவெளிக் காலத்திலிருந்து தொல்தமிழர் வணங்கும் தெய்வம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

கொற்றவையின் வாகனம் கலைமான் (Blackbuck stag) என்று தமிழ் இலக்கியமும் சிற்ப வரலாறும் காட்டிநிற்கிறது.


[Photo Courtesy: Dr. Michael Rabe, St. Xavier University, Chicago.
Durga with black antelope as vahana. From Chennai museum, originally from Tanjore district. Note that Durga sculptures with black antelope are found only in Tamil Nadu in India.]

சிலப்பதிகார வேட்டுவ வரியில், எயினர் மறக்குலப் பெண்ணான சாலினியைக் கொற்றவையாகக் கோலம் புனைந்து திரிதரு கோட்டுக் கலைமான் ஊர்தியில் ஏற்றுவது வர்ணிக்கப்பட்டுள்ளது.

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரிய திரிகோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் (சிலம்பு)

சிவபெருமானின் கையில் கணிச்சி மழுவும், கலைமானும் (கருமான்) விளங்குகின்றன. தேவாரச் செய்யுள்களில் ”கையமரும் மழு நாகம் வீணை கலைமான் மறியேந்தி மெய்யமரும் பொடிப் பூசி”, “கலைமான் மறி ஏந்து கையா!” என்றும், ”கரியின் னுரியுங் கலைமான் மறியும் எரியும் மழுவும் உடையான் இடமாம்”, ”செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங் 
கையர் கனைகழல் கட்டிய காலினர்” ”மைஞ்ஞிறமான்”...

சிவன் கிருஷ்ண அஜினம் அணிவது ஏன்? கையில் கலைமான் ஏந்துவது ஏன்?

Presence of 'Siva, S. Kramrsich, Princeton University press, pg. 338 
"The consecrating magic of the black antelope skin was vested in the black antelope, Rudra's victim. "Once upon a time the sacrifice escaped the gods, and having become a black antelope roamed about. The gods having thereupon found it, and stripped it of its skin" ('Satapatha Brahmana 1.1.4.1) [25]. 
[...] 
Even so it was the skin of the black antelope (kRSNaajina) that sanctified and was homologized with the brahman (KB 4.11). The gods flayed the animal; Rudra had shot it. 

Ironically though, by unerring logic, Rudra, who was excluded from the sacrifice, was the cause of the sacrificial, sanctifying magic emanating from the flayed skin of the black antelope, his victim. 

Ritually, the black antelope was the sacrifice. Mythically and ritually, Prajapati was the sacrifice. "With the sacrifice the gods sacrifice to the sacrifice" (Rgveda 10.90.16; VS 31.16; 'SB 10.2.2.2). The antelope was Prajapati and, from the beginning, Rudra's animal skin." 

பிரமனுக்கும் கலைமான் உரி உண்டு, சிவன் மனைவி கொற்றவை, பிரமனின் கலைமகள் இருவருக்கும் கலைமான் ஊர்தி. வட மொழியில் கலைமான் (கருமான்) க்ருஷ்ணமிருகம்
என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கருமான் = கிருஷ்ண மிருகம். ஈஸ்வரன் (பிரமனும்தான்) விரும்பி எப்போதும் அணிவது கிருஷ்ணமிருகம் எனப்படும் கலைமான் (கருமான்) தோலையே. சிவன், பிரம்மா சிலைகளில் யக்ஞோபவீதத்தில் கலைமான் தலை இருக்கும். 
பிரமன், சிவன் அணிவதால் அவர்கள் துணைவியர் கலைமகள், கொற்றவை இருவருக்கும் கருமான்/க்ருஷ்ணமிருகம் வாகனமும் ஆகும். ”கருமானின் உரியதளே உடையா வீக்கி” தேவாரம்.

காளமேகப் புலவர் சிவபிரானின் திருவீதி உலாவையும் - தமிழரின் 10 சாதிகளையும் சிலேடையாகப் பாடும் பலருமறிந்த செய்யுளில் கருமான் என்பது கம்மாளனுக்கும்,கலைமான் ஏற்றைக்குமாய் வருகிறது.

கட்டளைக் கலித்துறை

வாணியன் வாழ்த்திட வண்ணான் சுமக்க வடுகன்செட்டி
சேணியன் போற்றத் திரைப்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன் தாழக் கருமான் துகிலினைக் கொண்டணிந்த
வேணிய னாகிய தட்டான் புறப்பட்ட வேடிக்கையே! 

கலைமான் கறுப்பு நிறத்தினால் ஏற்பட்ட பெயர் என்று காட்ட மேலும் இரு விலங்குகளுக்கும் கலை என்ற பெயர் காட்டலாம். முசு (Tufted gray langur, லாங்கூலம்/நாங்கூழை) குரங்கில் விசேடமாக ஆணுக்கு கலை எனப் பெயர். முசு ஆங்கிலத்தில் Madras langur (or) Malabar langur எனப்படுகிறது. முசுவுக்கு மைம்முகன் என்ற பெயரை நிகண்டு கொடுக்கிறது. வடநாட்டில் இதற்கு நெருங்கிய உறவுடைய முசுவை ஹனுமான் குரங்கு என்கிறார்கள்.

1 comment:

  1. மிகவும் உதவியாக இருந்தது.சங்க இலக்கியங்கள், புராணங்களின்றும் விரிவாகப் பகிர்ந்தளித்திருக்கிறீர்கள். அன்பும் நன்றியும்

    ReplyDelete